×

ஜனமேஜயன்

நன்றி குங்குமம் ஆன்மிகம் கண்ணனால் காப்பாற்றப்பட்ட பரிட்சித்தின் மகன்; மாவீரனான அபிமன்யுவின் பேரன்-என்றெல்லாம் புகழ் பெற்றவர் ‘ஜனமேஜயன்’.முனிகுமாரன் சாபத்தால் பாம்பு தீண்டி பரிட்சித்து இறந்தபோது, ஜனமேஜயன் சிறு குழந்தையாக இருந்தார். சிறுவயதில் இருந்தே நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த ஜனமேஜயன் மறந்து போய்க்கூட, யாருக்கும் எந்தத் துன்பமும் விளைவித்ததே இல்லை. அதே சமயம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தன் நாட்டையோ-தன் குடி மக்களையோ, ஜனமேஜயன் விட்டுக் கொடுத்ததே இல்லை.பரிட்சித்திற்குப் பிறகு, ஜனமேஜயன் அரசராக இருந்தார். அவரிடம் அமைச்சர்களாக இருந்த அனுபவசாலிகள், காசி மன்னரான சுவர்ணவர்மா என்பவரின் மகளான ‘வபுஷ்டமை’ என்பவளை, ஜனமேஜயனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அரசாட்சி நன்கு நடந்து கொண்டிருந்தது. அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லி வந்த அமைச்சர்கள், ஜனமேஜயனின் முன்னோர்களான பாண்டவர்களின் அறச்செயல்களையும் அறப்போராட்டங் களையும் சொல்லிவந்தார்கள்.அவ்வாறு சொல்லிவந்த அமைச்சர்கள், ஜனமேஜயனின் தந்தையான பரிட்சித்தைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு தகவலைப் பற்றி, சற்று விரிவாகவே சொன்னார்கள். ‘‘மன்னா! உங்கள் தகப்பனார், முனிகுமாரன் சாபத்தால் பாம்பு தீண்டி மாண்டுபோனார். ஆனால் அதில் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. உங்கள் தந்தை அந்தப் பாம்பிடமிருந்து  தப்பிப்பதற்காக,உயர்வான ஒரு மாளிகையில் தகுந்த பாதுகாப்புகளுடன் இருந்தார். ஆனால் அத்தனையையும் மீறி, தட்சகன் எனும் அந்தப்பாம்பு வஞ்சனையாக,உங்கள் தந்தையைக் கொன்று விட்டது’’ என்று சொன்னார்கள்.கேட்டுக்கொண்டிருந்த மன்னர்,ஜனமேஜயன், ‘‘எப்படி? என்ன வஞ்சகமாக?’’ எனக் கேட்டார்.அமைச்சர்கள் பதில் சொன்னார்கள். (அதன் சுருக்கம்) பரிட்சித்து மன்னர் பாம்பு கடித்து இறக்கப்போகிறார் என்ற தகவல் பரவியது. அப்போது காசியபர் என்ற பிரம்மரிஷி, பரிட்சித்தைப் பார்ப்பதற்காக வேகவேகமாகப் போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த தட்சகன் எனும் நாகராஜன், ‘‘வேகவேகமாக எங்கே போகிறீர்கள்? அங்குபோய் என்ன செய்யப் போகிறீர்கள்!’’ எனக் கேட்டான்.‘‘பரிட்சித்து மன்னர்,தட்சகன் எனும் பாம்பு கடித்து இறக்கப் போகிறாராம். அந்தப் பாம்பின் விஷத்தில் இருந்து, மறுபடியும் அவரை உயிருடன் மீட்கப் போகிறேன் நான்’’ என்று பதில் கூறினார் காசியபர்.அதைக் கேட்ட நாக ராஜனான தட்சகன், தன் பாம்பு வடிவத்தைக் காட்டி, ‘‘ஐயா! நான்தான் அந்தத் தட்சகன். நான் கடிக்கப் போகிற அந்த அரசனை,நீங்கள் எதற்காகக் காப்பாற்ற விரும்புகிறீர்கள்? என்னால் கடிக்கப்பட்ட அந்த மன்னனைக் காப்பாற்ற உங்களால் முடியாது. என்சக்தியைப் பாருங்கள்!’’ என்று சொல்லி, அங்கிருந்த ஒரு பெரிய மரத்தைக் கடித்தான் தட்சகன்.பெரிய மரம் அதே விநாடியில் சாம்பலானது. காசியபர் அதைக்கண்டு அசரவில்லை; உடனே தன் மந்திர சக்தியால் அந்த மரத்தைப் பழையபடியே, கப்பும் கிளையுமாகத் தழைத்துப் பிழைக்கச் செய்தார்.தட்சகன் ஆச்சரியப்பட வில்லை;அவசரப்படவில்லை; அமை தியாகக் கேட்டான். ‘‘ஐயா!அதில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?’’ எனக் கேட்டான். ‘‘நிறையப் பொருள் கிடைக்கும்’’ எனப் பதில் சொன்னார் காசியபர்.தட்சகன் தொடர்ந்தான்;‘‘பெரும் முனிவரே! நீங்கள் அந்த அரசனிடம் இருந்து என்ன எதிர் பார்க்கிறீர்களோ, அதைவிட அதிக மாகத் தருகிறேன் நான். வாங்கிக் கொண்டு, வந்த வழியே திரும்பிப்போய் விடுங்கள்!’’ என ஏராளமாகக் கொட்டிக் கொடுத்தான் தட்சகன்.அதைப் பெற்றுக் கொண்ட காசியபர், வந்தவழியே திரும்பிப் போய்விட்டார். அதன்பின் தட்சகன் மாறுவேடத்தில் போய், உயர்ந்த மாளிகையின் மேல் பரிட்சித்து என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், அவரை விஷத்தால் எரித்து விட்டான். இவ்வளவு நேரமும் பார்த்தது, பரிட்சித்தின் முடிவைப் பற்றி அவர் மகனான ஜனமேஜயனுக்கு, மந்திரிகள் சொன்னது.தன் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் என்பதை அறிந்த ஜனமேஜயன் கொதித்தார். அதைக் கவனித்த அமைச்சர்கள், ‘‘மன்னா! தட்சகனும் காசியபரும் சந்தித்த தகவலை, எங்களுக்கு யார்  சொன்னார்கள் என்பதையும் சொல்கிறோம்.‘‘தட்சகன் சக்தியையும் காசியபரின் சக்தியையும் மெய்ப் பித்த அந்த மரத்தில், ஏற்கனவே ஒருவன் காய்ந்த விறகுகள் எடுக்க வேண்டும் என்பதற்காக ஏறி இருந்தான். மரத்தின் மேல் அவன் இருந்தது, தட்சகனுக்கும் காசியபருக்கும் தெரியாது. தட்சகன் தன் விஷ வேகத்தால் மரத்தை எரித்தபோது, மரத்தின் மேல் இருந்தவனும் எரிந்து போனான். பிறகு காசியபர் மறுபடியும் மரத்தைப் பிழைக்கச்செய்தபோது, மரத்தின் மேல் இருந்து அழிந்தவனும் மறுபடியும் உயிருடன் வந்தான்.‘‘விறகு எடுப்பதற்காக வந்த அவன், தான் நேருக்கு நேராகப் பார்த்ததை, எங்களிடம் சொன்னான். அதைத்தான் நாங்கள், உங்களிடம் சொன்னோம் மன்னா! மேலே செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்!’’ என்று சொல்லி முடித்தார்கள் அமைச்சர்கள்.கேட்டுக் கொண்டிருந்த ஜனமேஜயனுக்குக் கோபம் எல்லை மீறிப்போனது; அழுதார்; ‘‘அந்தக் காசியபர் வந்திருந்தால், என் தந்தை பிழைத்திருப்பாரே! அதில் தட்சகனுக்கு என்ன நஷ்டம்? வஞ்சகமாகச் செயல்பட்ட அந்தத் தட்சகனை, இனிமேல் விட்டு வைக்க மாட்டேன். தட்சகனையும் அவனைச்சேர்ந்த பாம்பு இனத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறேன். அதற்கு உண்டான ‘சர்ப்ப’ யாகத்தைச் செய்யப் போகிறேன்’’ என்றார் ஜனமேஜயன்.சர்ப்ப யாகம் செய்வதற்கான ஏற்பாடுகள் விமரிசையாக, முறைப்படி நடந்தன.அப்போது யாகசாலையைக் கட்டுவதற்காக, அதற்கான சிற்பி நிலத்தை நன்கு பரிசோதித்து-அளந்து யாகசாலையைக் கட்டி முடித்தார். கட்டி முடித்ததும், சிறந்த அறிவாளனும் தூய்மையான நடவடிக்கைகளும் கட்டிடக் கலையில் திறமையும் கொண்ட அந்தச் சிற்பி, சர்ப்பயாகத்திற்கான யாக சாலையைக் கட்டி முடித்ததும், ‘‘இந்த சர்ப்ப யாகம் முழுமையாக நிறைவேறாது. பாதியிலேயே நின்றுவிடும்’’ என்றார்.அதை அறிந்த ஜனமேஜயனோ,எந்த விதமான இடையூறும் குறுக்கிடாதவாறு, ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, சர்ப்ப யாகத்தைத் தொடங்கினார்.பெரும் அளவிலான யாக குண்டத்தில் அக்கினி மூட்டப்பட்டு, மந்திரங்களைச் சொல்லி, யாகத்தைத் தொடங்கினார்கள். மந்திரங்கள் உருவேற உருவேற, பாம்புகள் எல்லாம் ஒவ்வான்றாக வந்து, யாக குண்டத்தில் விழத் தொடங்கின. நேரம் ஆகஆக ஏராளமான பாம்புகள் வந்து யாக குண்டத்தில் விழுந்து இறந்தன.இவ்வளவிற்கும் காரணமான தட்சகன் மட்டுமல்ல; வாசுகி முதலான மற்ற நாக ராஜாக்கள் எல்லாம் நடுங்கினார்கள்; ‘‘ யாகத்தில் சொல்லப்படும் மந்திரங்களின் சக்தி, எந்த நேரத்திலும் நம்மை இழுத்துக் கொண்டுபோய், யாக குண்டத்தில் தள்ளி விடும்’’ என்று பயந்தார்கள்.அதை அறிந்த வாசுகியின் சகோதரி பிள்ளையான ஆஸ்திகர் என்பவர்,வாசுகிக்குத் தைரியம் சொன்னார்; ‘‘மாமா! வருத்தப்படாதீர்கள்! நான் இப்போதேபோய், மன்னன் ஜனமேஜயனிடம் நல்லவிதமாகப் பேசி,அந்த சர்ப்பயாகத்தை அதிவிரைவாக நிறுத்துகிறேன்’’ என்றார்.சொன்னதோடு மட்டுமல்ல! ஆஸ்திகர் உடனே, ஜனமேஜயன்யாகம் செய்யும் இடத்திற்குச் சென்றார்; ஜனமேஜயனைக் கண்டு, இனிமையான வார்த்தைகள் சொல்லி மகிழ்வித்தார்.ஜனமேஜயனும்,‘‘யாகம் செய்யும் வேளையில், உத்தமமான இந்த ரிஷி வந்திருக்கிறார்’’ என்று மகிழ்ந்து ஆஸ்திகரை முறைப்படி வரவேற்ற ஜனமேஜயன், ‘‘உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பேன்; செய்வேன். கேளுங்கள்!’’ என்றார்.ஆஸ்திகர் உடனே கேட்டார்; ‘‘மன்னா! நீங்கள் நடத்தும் இந்த சர்ப்ப யாகம் உடனே நிறுத்தப்பட வேண்டும். இனிமேல் இதில் பாம்புகள் விழக்கூடாது. இதுவே நான் கேட்கும் வரம்’’ என்றார்.ஜனமேஜயன் சற்று யோசித்தார். ‘‘சுவாமி, தங்கம், வெள்ளி, மாட-மாளிகைகள் என, நீங்கள் வேறு எதைக் கேட்டாலும் தருகிறேன். நான் நடத்தும் இந்த யாகம் நின்று போகக்கூடாது’’ என வேண்டினார்.ஆஸ்திகரோ, யாகத்தை நிறுத்துவதிலேயே குறியாய் இருந்தார். வேறு வழியற்ற நிலையில் ஜனமேஜயன், தான் செய்து கொண்டிருந்த சர்ப்ப யாகத்தை நிறுத்தினார்.(இந்த இடத்தில் வியாசபாரதத்தில்,ஏராளமான பாம்புகளின் பெயர்களைச் சொல்லி, அவற்றின் வகைகளைச்சொல்லி, ஒரு பெரும் ஆராய்ச்சி உரையே வரைந்திருக்கிறார் வியாசர்) வியாச பாரதம் முதலான மகாபாரத நூல்களும், பாகவத நூல்களும், தல புராணங்களும் ஜனமேஜயனைப் பற்றி விரிவாகவே கூறியிருக்கின்றன.சர்ப்பயாகம் செய்து ஏராளமான பாம்புகளைக் கொன்ற பாவத்தால், ஜனமேஜயனுக்குத் தொழுநோய் உண்டானது. நாளாக நாளாகத் தொழுநோய் வளர்ந்ததே தவிர, குறைந்ததாகக் காணோம். ராஜவைத்தியம் பார்த்தார்கள். வந்த மருத்துவர்கள் பொருள் பெற்றுப்  போனார்களே தவிர,நோய் போக வில்லை.ஜனமேஜயனுக்கோ, தாங்கமுடியாத உடல்வலியும் மனவலியும் உண்டாயின. ஒருகட்டத்தில், வேதனை தாளாத ஜனமேஜயன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.அந்த நேரத்தில் அங்கே தத்தாத்ரேயர் தோன்றி, ஜனமே ஜயனைத் தடுத்தார்; தற்கொலை செய்து கொள்வது பெரும் பாவம் என விவரித்து, மன்னனைப் பிடித்திருக்கும் நோய் தீர்வதற்கான வழிமுறைகளையும் சொன்னார் தத்தாத்ரேயர். ‘‘மன்னா! உன் தந்தையையும் அவர் முன்னோர்களையும் கட்டிக்காப்பாற்றிய கண்ணன், இப்போது உன்னைக் காப்பாற்றுவதற்காகவே, குருவாயூரில் எழுந்தருளி இருக்கிறார். அங்கு போய் குருவாயூரப்பனை வழிபாடு செய்! உன்னைப்பிடித்த இந்த நோய் தானாகவே விலகும்’’ என்று சொன்ன தத்தாத்ரேயர், குருவாயூரப்பன் வரலாற்றை விரிவாகக் கூறி,வழிபாடு செய்ய வேண்டிய முறைகளையும் விவரித்தார். அதை முழுமையாகக் கேட்ட ஜனமேஜயன், தத்தாத்ரேயரையும் அழைத்துக் கொண்டு குருவாயூர் சென்றார்; அங்கேயே நான்கு மாதங்கள் தங்கி, முறைப்படி வழிபாடுகளைச் செய்தார். தத்தாத்ரேயர் காட்டிய வழிபாட்டு முறைகளை, ஜனமேஜயன் செய்த வழிபாட்டு முறைகளை மூலநூல் விவரித்துள்ளது.ருத்திர தீர்த்தம் எனும் கோவில் திருக் குளத்தில் மட்டும் நீராடுவது; ருத்திரகூபம் எனும் கிணற்றுநீரை மட்டும் குடிப்பது; பகவானுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை மட்டும் சிறிதளவு அருந்துவது; அதிகாலை நிர்மாலிய தரிசனத்தில் இருந்து, இரவுநேர ‘திரிபுக்கா’ தரிசனம் வரையிலான 12-தரிசனங்களையும் தரிசிப்பது; அதிகாலையில் குருவாயூரப்பனைத் தரிசித்துவிட்டு, உண்டான முறைப்படி உடனே மம்மியூர் போய் சிவபெருமானைத் தரிசிப்பது-என்றே செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஜனமேஜயன். ஒருநாள்… ஜனமேஜயனின் கனவில் காட்சியளித்த குருவாயூரப்பன், தன் மலர் போன்ற திருக்கரங்களால் ஜனமேஜயன் உடம்பை முழுவதுமாகத் தடவிக்கொடுத்தார். கனவு கலைந்தது. கண் விழித்த ஜனமே ஜயன் ஆச்சரியப் பட்டார். அவரைத் துயரப்படுத்திக் கொண்டிருந்த நோய் முழுவது மாக நீங்கி,அவர் பூரண ஆரோக்கியமான உடலுடன் விளங்கினார். பிறகு வியக்காமல் என்ன செய்வார்?நோய் தானே அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு இணங்க, ஜனமேஜயனுக்கு அருள் செய்ததைப் போலவே, நமக்கும் ஆரோக்கியத்தை வழங்க அந்தக் குருவாயூரப்பனையே வேண்டுவோம்.குருவாயூரப்பனின் திருவருளைப் பாராட்டிய ஜனமேஜயன், அதன்பின் தத்தாத்ரேயருடன் தன்நாடு திரும்பி, நல்ல முறையில் ஆட்சிசெய்தார்.தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post ஜனமேஜயன் appeared first on Dinakaran.

Tags : Janamejayan ,Paritshit ,Kannan ,Kunkum Anmikam ,Abhimanyu ,Munikumaran ,
× RELATED ‘’வீட்டுக்கு சப்ளை துண்டித்ததால்...